Archives: மே 2022

புயலை தகர்க்கும் நம்பிக்கை

2021ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் டெக்ஸாஸில், சூழல்காற்றின் அருகே தோன்றிய வானவில்லின் காணொலிகளையும், புகைப்படங்களையும் ஆர்வலர்கள் பதிவுசெய்திருந்தனர். அதில் ஒரு காணொலியில், நீண்ட கோதுமை கதிரின் தண்டுகள் காற்றின் வீரியத்தால் வளைந்திருந்தன, கருவானத்தை துண்டாடிய வானவில், சுழல்காற்றுக்கு முன் கெம்பிரமாய் நின்றது. இன்னொரு காணொலியில், பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு புனல் வடிவ மேகத்தின் அருகே இருந்த அந்த நம்பிக்கையின் சின்னத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 

சங்கீதம் 107இல் சங்கீதக்காரன், கடினமான தருணங்களில் தேவனிடத்திற்கு திரும்பும்படிக்கு நமக்கு நம்பிக்கைக் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அந்த புயலின் நடுவில் இருப்பவர்களின் “ஞானமெல்லாம் முழுகிப்போகிறது” (வச. 27) என்று விவரிக்கிறார். “அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்” (வச. 28). 

வாழ்க்கையில் புயல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது நம்பிக்கையோடு செயல்படுவதற்கு தேவனுடைய பிள்ளைகள் தடுமாறுவார்கள் என்பதை தேவன் அறிவார். நம்முடைய பாதை இருளாயிருக்கும்போது, அவருடைய நன்மைகளை நினைவுகூருதல் அவசியம். 

உணர்வு ரீதியான புயலோ, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஒன்றோ நம் வாழ்வை கலங்கடிக்கும்போது, தேவன் அதையே அமர்ந்த மெல்லிய சத்தமாய் மாற்றி நம்மை பாதுகாப்பாய் வழிநடத்துவார் (வச. 29-30). நாம் எதிர்பார்த்த நேரத்தில் நமக்கு நன்மை கிட்டவில்லையென்றாலும், அவர் கொடுத்த வாக்குத்தத்தங்களில் அவர் உண்மையுள்ளவர் என்று அவரையே நம்புவோம். எப்பேர்ப்பட்ட புயலையும் தகர்க்க அவர் என்றென்றும் நம்பத்தக்கவரே.

முழு உலகத்திற்கும் சுகம்

இரண்டாம் உலகப்போரில் காயமடைந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவி செய்யும் பல அலுவலர்களைக் கொண்ட ஒரு மருத்துவ அமைப்பு (ப்ரான்ஜா பார்டிசன் மருத்துவமனை), நாசிச கிளர்ச்சியாளர்களுக்கு மறைவாக, மேற்கு ஸ்லோவேனியாவின் ஒரு வனப்பகுதியில் மறைந்து செயல்பட்டனர். அதைக் கண்டுபிடிக்க நாசிச அமைப்பினர் ஏறெடுத்த பல முயற்சிகள் வீணாய் போனது. அவர்களின் கண்களுக்கு மறைந்து செயல்பட்டதே பெரிய சாதனை. அதை பார்க்கிலும் பெரிதானது, நேச நாடுகளிலிருந்தும், எதிரி நாடுகளிலிருந்தும் காயப்பட்ட அனைத்து இராணுவ வீரர்களையும் அந்த அமைப்பு பராமரித்தது தான். அந்த மருத்துவமனை அனைவரையும் வரவேற்றது. 

முழு உலகமும் ஆவிக்குரிய சுகம் பெற நாம் உதவும்படி வேதம் நம்மை அழைக்கிறது. அதாவது, நாம் பாகுபாடில்லாமல் அனைவர் மீதும் இரக்கம் செலுத்தவேண்டும் என்று அர்த்தமாகிறது. யாராக இருந்தாலும், எப்படியிருந்தாலும் அவர்கள் கிறிஸ்துவின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் பாத்திரவான்கள். பவுல், “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க...” (2 கொரிந்தியர் 5:14) என்று அனைவரையும் அரவணைக்கும் இயேசுவின் அன்பை குறிப்பிடுகிறார். பாவ நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இயேசுவின் மன்னிப்பு எனும் சுகம் நம் அனைவருக்கும் அவசியம். அவர் நமக்கு மன்னிப்பைக் கொடுக்க நம்மிடத்தில் வருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

தேவன் ஆச்சரியவிதமாய், “ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை” (வச.19) நம்மிடத்தில் ஒப்புவித்துள்ளார். நம்மைப் போல் காயப்பட்ட மற்றும் நொறுக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறார். தேவனோடு ஒப்புரவாகுதலின் மூலம், பாவநோயாளிகள் குணமாகும் மருத்துவ அமைப்பில் நாமும் அங்கத்தினராய் செயல்படுகிறோம். இந்த ஒப்புரவாகுதலும், சுகமும் விரும்புகிற யாவருக்கும் கொடுக்கப்படுகிறது. 

சற்று நிறுத்தி ஜெபியுங்கள்!

வீதியிலிருந்த தீயணைப்பு குழாயிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடைத்தது. அது எனக்கு ஒரு வாய்ப்பாய் தெரிந்தது. எனக்கு முன், பல கார்கள் அதின் தண்ணீரால் தங்களை சுத்தம் செய்துக் கொண்டது. 'காரை சுத்தம் செய்வதற்கு என்ன அருமையான இலவச வாய்ப்பு!' என்றெண்ணினேன். மாதக்கணக்காய் என் காரை கழுவவில்லை. அதினால் அழுக்கு அடர்த்தியாய் படிந்திருந்தது. ஆகையால் நானும் என் காரை அந்த தண்ணீருக்குள் செலுத்தினேன். 

அவ்வளவுதான், 'க்ராக்!' என்று சத்தம் கேட்டது. அன்று காலைல்தான் சூரிய ஒளி என் கருப்புநிற காரின் கண்ணாடி, உட்பகுதியையும் சூடேற்றியிருந்தது. தீயணைப்புக் குழாயிலிருந்து வந்த தண்ணீரோ உறைந்திருந்தது. இந்த குளிர்ந்த நீர் சூடான கண்ணாடியின் மேல் பட்ட மாத்திரத்தில், மேலிருந்து கீழாக விரிசல் ஏற்பட்டது. என் 'இலவச கார் சலவை', அதிக செலவையே உண்டுபண்ணியது. 

அதை செய்வதற்கு முன்பாக சற்று நேரமெடுத்து யோசித்திருந்தால் அல்லது ஜெபித்திருந்தால் நலமாயிருந்திருக்கும். அப்படிப்பட்ட தருணம் உங்களுக்கு நேரிட்டிருக்கிறதா? இஸ்ரவேலர்கள் இதைவிட கடினமான சூழ்நிலைகளில் இதை அனுபவித்துள்ளனர். தேவன் அவர்களுக்குக் கொடுக்கும் தேசத்தின் குடிகளை விரட்டியடிப்பதாக அவர்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார் (யோசுவா 3:10). எனவே, அவர்கள் அந்நிய தேவர்களால் ஈர்க்கப்பட அவசியமில்லாதிருந்தது (உபாகமம் 20:16-18). ஆனால் ஒரு புறஜாதி தேசம், இஸ்ரவேலர்களின் வெற்றிகளை பார்த்து பயத்தினால், உலர்ந்து பூசணம் பூத்த அப்பத்தை  உண்ணக் கொடுத்து, தாங்கள் தூர தேசத்தில் வசிப்பவர்களென்று இவர்களை நம்பச் செய்தார்கள் . “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்”. (யோசுவா 9:14-15). யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணினான். இது கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமானது. 

நாம் ஜெபத்தை இறுதியாய் அல்லாமல் முதன்மையாய் வைத்து தீர்மானம் எடுக்கும்போது, தேவனுடைய வழிநடத்துதலையும், ஞானத்தையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்குகிறோம். சற்று நேரம் நின்று யோசிப்பதற்கு தேவன் இன்று நமக்கு நினைப்பூட்டுவாராக.

இடுக்கமான வாசல் உணவகம்

சுவையான நொருக்குத் தீனிகள், பாலாடைக் கட்டிகள், இறைச்சி என்று அனைத்து வகை சுவையான உணவுகளும் இந்த இடுக்கமான வாசல் உணவகத்தில் உங்களுக்கு காத்திருக்கிறது. தைவானிய நகரமான தைனான் என்ற ஊரிலிருக்கும் இந்த உணவகம், பார்ப்பதற்கு சுவரைக் குடைந்து ஓட்டை ஏற்படுத்தியதுபோலவே இருக்கும். அதின் நுழைவாயில் வெறும் 40 செ.மீ அகலமே கொண்டது. ஒரு சராசரி உடல்வாகு கொண்ட நபர் சிரமப்பட்டு உள்ளே போகலாம். இருப்பினும், அந்த உணவகம் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்த இடுக்கமான வாசல் லூக்கா 13:22-30இல் குறிப்பிடப்பட்டதற்கு ஒத்திருக்குமா? சிலர் இயேசுவைப் பார்த்து, “இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” (வச.23) என்று கேட்கின்றனர். அதற்கு இயேசு, “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்” (வச.24) என்று சவால் விடுகிறார். இரட்சிக்கப்பட்டவர்கள் பட்டியலில் நீங்கள் இடம்பெற்றிருக்கிறீர்களா? என்று இந்த ஒப்புமையை பயன்படுத்தி யூதர்களின் ஆணவத்தை இயேசு சுட்டிக்காட்டுகிறார். தாங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும், நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவர்கள் என்பதினால் தாங்கள் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்போம் என்று யூதர்களில் பலர் எண்ணியிருந்தனர். ஆனால், “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு” (வச. 25) ஒன்றும் செய்ய இயலாது என்பதினால் அவர்களை முன்பாகவே செவிகொடுக்கும்படி எச்சரிக்கிறார். 

நம்முடைய குடும்ப பின்னணிய பெருமையும், நம்முடைய நற்கிரியைகளும் தேவனோடு நம்மை ஒப்புரவாக்காது. இயேசுவில் நாம் வைக்கும் விசுவாசம் மட்டுமே நம்மை பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் தப்புவிக்கும் (எபேசியர் 2:8-9; தீத்து 3:5-7). வாசல் இடுக்கமானது, ஆனால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு விசாலமாய் அமைந்திருக்கிறது. இந்த இடுக்கமான வாசல் வழியாய் அவருடைய இராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்த அவர் இன்று நம்மை அழைக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?

பிரமிப்பிற்கான ஜன்னல்

புகைப்படக் கலைஞர் ரான் முர்ரே குளிர் காலநிலையை விரும்புகிறார். "குளிர் என்றால் தெளிவான வானம், அது பிரமிப்பிற்கான ஒரு ஜன்னலைத் திறக்கும்!" என்று அவர் விளக்குகிறார்.

அலாஸ்கா பகுதியில் பூமியின் மிகவும் கண்கவர் ஒளி நிகழ்ச்சியான அரோரா பொரியாலிஸ் (வடக்கு விளக்குகள்)-ஐ பிரேத்யேகமாக படம்பிடிக்க வழிகாட்டும் சுற்றுலா சேவையை ரான் வழங்குகிறார். முர்ரே, இந்த  அனுபவத்தை "தெய்வீகமானது" என்று விளக்குகிறார். நீங்கள் எப்போதாவது வானத்தில் வெவ்வேறு ஒளிகளிலும் வெவ்வேறாகத் தோன்றும் முனைப்பான பல வண்ணங்களை வெளிப்படுத்துகிற இந்த மாறுபட்ட காட்சியைப்  பார்த்திருந்தால், அது ஏன் தெய்வீகமானது என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

ஆனால் இந்த ஒளிவிளக்கு தோற்றங்கள் வடக்கு பகுதியில் மட்டுமல்ல. அதே வகையான ஒளிவிளக்குகளான அரோரா ஆஸ்ட்ராலிஸ், ஏறக்குறைய பொரியாலிஸைப் போன்றவை, தெற்கில் அதே நேரத்தில் நிகழ்கிறது.

கிறிஸ்துமஸ் நிகழ்வைப் பற்றி சீஷன் யோவான் கூறுவதில், அவர் தொழுவத்தையும் மேய்ப்பர்களையும் தவிர்த்துவிட்டு, நேரடியாக "மனுஷருக்கு ஒளியாயிருந்(த)தது" (யோவான் 1:4) ஒருவரைக் குறிப்பிடுகிறார். யோவான் பின்னர் ஒரு பரலோக நகரத்தைப் பற்றி எழுதுகையில், அதன் ஒளியின் ஆதாரத்தை விவரிக்கிறார். இந்த "நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு" (வெளிப்படுத்துதல் 21:23). இந்த ஒளியின் ஆதாரம் இயேசு; யோவான் 1ல் குறிப்பிடப்பட்ட அதே ஆதாரம். மேலும் இந்த வருங்கால இருப்பிடத்தில் வசிப்பவர்களுக்கு, “இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார்” (22: 5).

அரோரா பொரியாலிஸ் மற்றும் ஆஸ்ட்ராலிஸை உருவாக்கிய உலகின் ஒளியானவரை வாழ்க்கை பிரதிபலிக்கும் போது, ​​உண்மையிலேயே ஒரு பிரமிப்பான வாசலைத் திறக்கிறோம்.